கன மழை பெய்ததால் பூங்காவில் உள்ள ரோஜா மலர்கள் அழுக ஆரம்பித்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி ரோஜா பூங்காவில் தற்போது 4201 ரகங்களை சேர்ந்த 31 ஆயிரத்து 500 ரோஜாக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இந்த ரோஜா பூங்காவிற்கு கோடை சீசனை முன்னிட்டு பல்வேறு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா பரவல் காரணத்தால் அனைத்து சுற்றுலா தலங்களும் மூடப்பட்டுள்ளது. இதனால் இந்த பூங்காவிலும் ரோஜா கண்காட்சி நடைபெறவில்லை.
இந்நிலையில் தற்போது பூத்து குலுங்கிய ரோஜா மலர்கள் கடந்த 4 நாட்களாக பெய்த கனமழை காரணமாக அழுகி இதழ்கள் உதிர்ந்து கிடக்கின்றன. இவ்வாறு மலர்க் கண்காட்சிக்காக தயார் செய்யப்பட்டிருந்த ரோஜா மலர்கள் அழுகி வீணாவதால் பணியாளர்கள் வருத்தத்தில் உள்ளனர். இதனை அடுத்து ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் திறந்த வெளியில் இருக்கும் பூந்தொட்டிகளில் உள்ள மலர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு உதிர்ந்த இதழ்களை பணியாளர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.