தமிழகத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில்,மக்களுக்கு சற்று குளிர்ச்சியை ஊட்டும் விதமாக ஆங்காங்கே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்னும் ஒருசில தினங்களில் தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் பரவலாக இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மே 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.
அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலோரப் பகுதிகளில் மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் சென்னையில் தொடர்ந்து இரண்டாவது நாளாக பெரும்பாலான இடங்களில் இன்று மழை பெய்து வருகிறது. அதன்படி சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, சிந்தாதிரிப்பேட்டை, தேனாம்பேட்டை, அண்ணா சாலை மற்றும் எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சென்னை முழுவதும் கருமேகங்கள் சூழ்ந்து குளுமையுடன் காணப்படுகிறது.