பொது கணக்கு கமிட்டி மூலம் அரசு தொடர்புடைய துறைகளில் முறைகேடு நடைபெறுகிறதா என்று திமுக ஆய்வு மேற்கொண்டு வருவதாக திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
மதுரை ராஜாஜி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சரியான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று திமுக சார்பில் பொருளாளர் துறை முருகன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். பின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர் சட்டமன்றத்தில் ஏராளமான கமிட்டிகள் உள்ளன. ஒவ்வொரு கமிட்டிக்கு ஒரு எம்எல்ஏ சேர்மனாக இருப்பார். இந்த சேர்மன் பதவியில் எல்லா ஆளும் கட்சி, எதிர்க் கட்சி உறுப்பினர்களும் இருப்பார்கள்.
இதற்கென ஒவ்வொரு கமிட்டிக்கும் ஒவ்வொரு தனி வேலை உண்டு. அதில் மிகவும் பிரசித்த பெற்றது பொதுகணக்கு கமிட்டி. இந்த கமிட்டியில் எப்பொழுதுமே எதிர்க் கட்சியை சேர்ந்தவர்கள் தான் தலைவராக இருப்பார்கள். ஏனென்றால் இந்த கமிட்டியினுடைய வேலை அரசாங்கம் திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியின் அளவு குறித்தும், அந்த அளவு சரியாக செலவு செய்யப்பட்டிருக்கிறதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளும்.
மேலும் அரசு தொடர்புடைய துறைககளில் முறைகேடுகள் நடைபெறுகிறதா? என்பதை ஆய்வு செய்யும் கமிட்டியாகவும் பொதுகணக்கு கமிட்டி செயல்படும் என்றார். உதாரணமாக ஒரு குறிப்பிட்ட துறையின் மீது குற்றம் சுமத்தப்படுகிறது என்றால் அதன் மீதான விசாரணையை பொதுகணக்கு கமிட்டி நடத்தும், விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப் படலாம் அல்லது டிஸ்மிஸ் செய்யப்படலாம் என்று அவர் தெரிவித்தார்.
அந்த வகையில் பொதுக்கணக்கு கமிட்டி சார்பில் பல்வேறு இடங்களில் திமுக ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பேசிய அவர், மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகள் நன்நடத்தைக்காக ஒரு குறிப்பிட்ட மதிப்பெண்ணை காவல்துறை அதிகாரிகளிடம் இருந்து பெறுவார்கள். அந்த மதிப்பெண் வழங்குவதில் குளறுபடி இருப்பதாக தற்போது புகார் ஒன்று எழுந்துள்ளது. அதில் மதிப்பெண் வழங்குவதில் காவல்துறையினர் பாரபட்சம் பார்ப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இது குறித்த விசாரணையை மேற்கொள்ள இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.