தாய்- மகள் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள புலிவலம் விஷ்ணுதோப்பு பகுதியில் தமிழரசி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தன் கணவரை இழந்து 2 மகள்கள் 2 மகன்களுடன் வசித்து வந்துள்ளார். இதில் கடைசி மகள் ஜோதி கணவரை பிரிந்து புதுச்சேரியில் வசித்து வந்துள்ளார். இவருடைய மகன் 5 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குட்டையில் மூழ்கி உயிரிழந்து விட்டார். அதன்பின் ஜோதி அவரது தாய் வீட்டில் தங்கி ஒரு பேக்கரி கடையில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் ஜோதி ஒருவாரத்திற்கு மேலாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார்.
இதனையடுத்து ஜோதியின் அக்காள் மகனான முகிலன் என்பவர் ஜோதியை பார்ப்பதற்காக வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது தமிழரசியும் அவரது மகள் ஜோதியும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலமாக கிடந்த தாய்-மகள் இருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தாய் -மகள் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.