கன்னியாகுமரியில் கள்ளக்காதல் தொடர்பாக வாலிபரை குத்தி கொலை செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள இரணியல் ஆர். சி தெருவில் சுஜித் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திங்கள்சந்தை மார்க்கெட்டில் மீன் விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில் சுஜித் அவரது நண்பரான ஸ்டெபினுடன் மாங்குழி பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது திங்கள்சந்தை அருகில் வைத்து பெரியபள்ளியில் வசிக்கும் லாரி உரிமையாளரான சுரேஷ் மற்றும் அவருடைய நண்பர் விமல் ஆகிய இருவரும் சேர்ந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த சுஜித்துடன் தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து சுரேஷ் மற்றும் அவரது நண்பர் விமல் இருவரும் சேர்ந்து சுஜித்தை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுஜித்தின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில், சுஜித்கும் வாடிவிளையை சேர்ந்த திருமணமான பெண்ணிற்கும் கள்ளத்தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணிற்கு கொலையாளியான சுரேஷ் என்பவருக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதனால் சுஜித்கும், சுரேஷ்க்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக சுஜித்தை சுரேஷ் கொலை செய்தது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடிய சுரேஷ், விமல் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் காவல்துறையினரிடம் சுரேஷ் கொடுத்த வாக்குமூலத்தில், “எனக்கும் வாடிவிளையை சேர்ந்த அந்த பெண்ணிற்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. ஆனால் அந்தப் பெண் கடந்த சில நாட்களாக என்னுடன் பேசுவதை தவிர்த்து வந்தார். அப்போதுதான் சுஜித்கும் அந்தப் பெண்ணிற்கும் ஏற்கனவே தொடர்பு இருப்பது எனக்கு தெரியவந்தது. இதனால் சுஜித்தை மாங்குழி குளக்கரைக்கு வரச்சொல்லி நானும் என் நண்பன் விமலும் சேர்ந்து அவரை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினோம்” என்று சுரேஷ் வாக்குமூலம் கொடுத்துள்ளார். மேலும் இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.