கோவிலுக்குள் நுழைந்து 4 1/2 பவுன் அம்மன் நகைகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ள சாமியார்மடம் கைதக்குளம் பகுதியில் துர்கா இசக்கியம்மன் கோவில் இருக்கின்றது. இந்த கோவிலில் தினசரி மாலை வேளையில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கோவில் பூசாரி பூஜை செய்வதற்கு உள்ளே சென்றபோது அம்மனுக்கு அணிவித்திருந்த தங்க மூக்குத்தி, தாலி, பொட்டு என 4 1/2 பவுன் தங்க நகை திருட்டுப் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதனையடுத்து காவல்துறையினர் கோவிலுக்கு சென்று பூசாரியிடம் விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் பூசாரி கூறியபோது. தினமும் கோவிலில் பூஜை செய்து விட்டு சாவியை அருகில் இருக்கும் அறையில் வைத்து செல்வது வழக்கம் என்று கூறியுள்ளார். மேலும் இதனை கண்காணித்த மர்ம நபர்கள் சாவியை எடுத்து நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்தப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டிவி கேமரா காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சி.சி.டிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கோவிலில் கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.