உலக நாடுகளில் தடுப்பூசி செலுத்துவதில் முதல் 5 இடங்களை பிடித்த நாடுகளின் பட்டியல் வெளிவந்துள்ளது.
உலக நாடுகளில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி செலுத்தும் திட்டம் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்துவதில் முதல் 5 இடங்களில் எந்தெந்த நாடுகள் உள்ளன என்ற பட்டியலை “Our world in data” என்ற இணையதளம் வெளியிட்டிருக்கிறது. அதன் படி கொரோனாவின் தாயகமான சீனா தான் தடுப்பூசி செலுத்துவதிலும் முதலிடம் வகிக்கிறது.
சுமார் 40 கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தி இருக்கிறது. இரண்டாம் இடத்தில் இருக்கும் நாடு அமெரிக்கா. சுமார் 27 கோடிக்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தியுள்ளது. மூன்றாம் இடம் வகிக்கும் இந்தியா, 18 கோடி நபர்களுக்கு தடுப்பூசி அளித்துள்ளது. இதனையடுத்து பிரிட்டன் மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் நான்கு மற்றும் ஐந்தாம் இடங்கள் வகிக்கின்றன.
பிரான்ஸ் மற்றும் இத்தாலி போன்ற நாடுகள் அதற்கடுத்த இடங்களில் இருக்கிறது. மேலும் மக்கள் தொகையை கருத்தில் கொள்ளாமல், தடுப்பூசி அளிக்கப்பட்ட சதவீதத்தை வைத்து பார்த்தால் இஸ்ரேல் தான் முதலிடத்தில் உள்ளது.
மங்கோலியா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்திலும், பஹ்ரைன் மற்றும் ஹங்கேரி போன்ற நாடுகள் 4 மற்றும் 5ஆம் இடங்களில் இருக்கிறது. ஆனால் ஏழை நாடுகள் தான் தடுப்பூசி கிடைக்காமல் பின்தங்கிய நிலையில் உள்ளது.