மாருதி சுசுகி நிறுவனம் தனது நான்கு டீசல் வாகன மாடல்களுக்கு ஐந்து ஆண்டுகள் மற்றும் ஒரு லட்சம் கிலோமீட்டர் வாரண்டி வழங்குவதாக கூறியுள்ளது .
இதில் மாருதி டிசையர், எஸ்-கிராஸ், ஸ்விஃப்ட் மற்றும் விடாரா பிரெஸ்ஸா போன்ற மாடல்களுக்கு இந்த புதிய வாரண்டி சலுகை பொருந்தும் என அந்நிறுவனம் கூறியுள்ளது . இதுமட்டுமின்றி இச்சலுகை மாருதியின் நெக்சா மற்றும் அரீனா ஷோரூம்களில் இந்த வாகனங்களை முன்பதிவு செய்வோருக்கு எவ்வித கூடுதல் கட்டணமின்றி வழங்கப்பட உள்ளது .
மேலும் , இந்தியா முழுக்க 1893 பகுதிகளில் நெக்சா மற்றும் அரீனா விற்பனையகங்கள் செயல்பட்டு வருகிறது . குறிப்பாக இவ்வாரண்டியில் வாகனங்களின் பல்வேறு பாகங்களை சரி செய்தும் அவற்றை மாற்றியும் கொடுக்கப்படுகிறது. இதில் குறிப்பாக ஹை-பிரெஷர் பம்ப், கம்ப்ரெஸர், எலெக்டிராணிக் கண்ட்ரோல் மாட்யூல், டர்போசார்ஜர் அசெம்ப்ளி, க்ரிடிக்கல் என்ஜின் மற்றும் டிரான்ஸ்மிஷன் பாகங்கள் மாற்றிக் கொடுக்கப்படும் .
இதுதவிர ஸ்டீரிங் அசெம்ப்ளி மற்றும் சஸ்பென்ஷன் ஸ்ட்ரட்களும் வாரண்டியில் சரி செய்யப்படும் எனவும் கூறியுள்ளது . குறிப்பாக , இச்சலுகை புதிதாக கார் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இதனால் ஏற்கனவே வாகனங்களை வாங்கியவர்களுக்கு இச்சலுகை பொருந்தாது.
மேலும் இத்திட்டத்தில் பொருந்தும் அனைத்து வாகனங்களிலும் 1.3 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. ஆனால் என்ஜின்கள் பி.எஸ். 6 புகை விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்படாததால் , இவை விரைவில் நிறுத்தப்படலாம் எனவும் அந்நிறுவனம் கூறியுள்ளது .