இந்தியாவில் டி20 உலக கோப்பை போட்டியை நடத்துவது குறித்து, ஐசிசி வருகின்ற ஜூன் 1ம் தேதி ஆலோசனை நடத்துகிறது .
இதுவரை ஆறு டி20 உலக கோப்பை போட்டிகள் நடைபெற்று உள்ளன . இதில் கடந்த 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை போட்டியில் ,தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்நிலையில் 7வது டி20 உலகக் கோப்பை போட்டியை , வரும் அக்டோபர்- நவம்பர் மாதங்களில் ,இந்தியாவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக சென்னை,மும்பை, பெங்களூர்,கொல்கத்தா,ஹைதராபாத்,அகமதாபாத் ,லக்னோ, டெல்லி மற்றும் தர்மசாலா ஆகிய இடங்களில் போட்டிகள் நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டது. இந்த போட்டியில் 16 நாடுகள் பங்கேற்க உள்ளன மொத்தமாக 45 போட்டிகள் நடைபெற உள்ளது.
ஆனால் தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் அதிகரித்து இருப்பதால் , உலகக் கோப்பை டி 20 போட்டி நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது .அத்துடன் இந்தியாவில் திட்டமிட்டபடி நடைபெறுமா, என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் வரும் ஜூன் 1ம் தேதி , ஐசிசி இந்தியாவில் டி20 உலகக் கோப்பை போட்டி நடத்துவது பற்றி ஆலோசனைநடத்துகிறது . எனவே இந்த சிறப்புக் கூட்டத்தில், இந்தியாவில் போட்டி நடத்த முடியுமா என்பது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகிறது. இதற்கு முன்னதாக வரும் 29ஆம் தேதி பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை நடத்துகிறது. இந்தக் கூட்டத்தில் உலக கோப்பை டி20 போட்டி மற்றும் மீதமுள்ள ஐபிஎல் போட்டி தொடர்பாக முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் மூலம் எடுக்கப்பட்ட முடிவுகளை, ஐசிசி -யுடன் நடைபெறும் சிறப்பு கூட்டத்தில் கலந்து ஆலோசிக்கும். அத்துடன் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்தால் , திட்டமிட்டபடி டி20 உலகக் கோப்பை போட்டி, இந்தியாவில் நடத்துவதற்கு பிசிசிஐ முடிவு செய்துள்ளது. இதற்காக ஜூன் மாதம் இறுதி வரை காத்திருக்க வேண்டியிருக்கும். ஒருவேளை இந்தியாவில் போட்டி நடத்த முடியவில்லை என்றால், இதற்கு மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டி நடைபெறும், என்று கிரிக்கெட் வாரியம் ஏற்கனவே முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.