தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது மே 23-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத பட்சத்தில், நேற்று முதல்வர் மருத்துவக் குழுவுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தளர்வுகள் இல்லாத ஊரடங்கு மே 24-ஆம் தேதி அமலுக்கு வரும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
இதையடுத்து தமிழகத்தில் இன்று நாள் முழுவதும் அனைத்து கடைகளும் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் சென்னை கோயம்பேடு சந்தை இன்று செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோயம்பேடு காய்கறி, கனி, பழ விற்பனை சந்தை இன்று அதிகாலை முதல் மாலை வரை செயல்படும். தற்போது மொத்த வியாபாரம் முழுவதுமாக நடைபெற்று வருகிறது. சில்லறை வியாபாரிகளுக்கு சுழற்சி முறையில் விற்பனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் நாளை முதல் சந்தை செயல்படுமா என்பது ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் தெரியவரும்.