கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த மல்யுத்த வீரர் சுஷில் குமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஒலிம்பிக் போட்டியில் 2முறை முறை பதக்கம் வென்ற, இந்திய மல்யுத்த வீரரான சுஷில் குமார் தரப்புக்கும், முன்னாள் தேசிய சாம்பியன் வீரர் சாகர் தன்கட் தரப்புக்கும் இடையே , கடந்த 2ஆம் தேதி டெல்லி சத்ராசல் அரங்கில் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் வீரர் சாகரை சுஷில்குமாரும்,அவரது நண்பர்களும் கடுமையாக தாக்கினர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த சாகரை ,அவருடைய நண்பர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தார் . ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி, போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதில் முக்கிய குற்றவாளியான சுஷில் குமார் தலைமறைவாக இருந்தார்.
இதனால் டெல்லி போலீசார் தனிப்படை அமைத்து தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அத்துடன் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்ல முடியாத வகையில், அனைத்து விமானங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதைத்தொடர்ந்து சுஷில் குமார் ஜாமீனில் வெளிவர முடியாத வகையில் டெல்லி நீதிமன்றம் ஜாமீனில்லா வாரண்டை பிறப்பித்தது. அதோடு இவரைப் பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு பரிசுத் தொகையும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த சுஷில் குமார் , இன்று டெல்லி தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.