அமெரிக்காவில் சாலையில் பயணம் செய்து கொண்டிருந்த போது குறுக்கே திடீரென வந்த காரினை பார்த்து மோசமான சைகையை காட்டிய பெண் எதிர்பாராதவிதமாக மகனை இழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள நெடுஞ்சாலை ஒன்றில் தனது மகனை பள்ளிக்கு அழைத்து சென்று கொண்டிருந்த பெண் சட்டென குறுக்கே கடந்த காரை பார்த்து கோபத்தில் மோசமான சைகையை காட்டியுள்ளார். இதனால் அந்த காரில் இருந்தவர் துப்பாக்கியை எடுத்து அந்தப் பெண் பயணித்து கொண்டிருந்த காரை நோக்கி சுட்டுள்ளார். அதில் காரின் பின் இருக்கையில் அமர்ந்திருந்த அந்த பெண்ணின் மகன் மீது துப்பாக்கியிலிருந்த குண்டு பாய்ந்துள்ளது. இதையடுத்து அந்த 6 வயது சிறுவனான ஐடென் லெவ்ஸ் வயிறு வலிக்கிறது என்று கதற அந்த பெண் காரை ஓரங்கட்டி ரத்தவெள்ளத்தில் கிடந்த தனது மகனை தூக்கிக்கொண்டு பரிதவித்து நிற்க அவ்வழியாக வந்த காவல்துறை அதிகாரி ஒருவர் அந்த சிறுவனுக்கு முதலுதவி அளித்துள்ளார்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்த அந்த சிறுவனை பார்த்து அவருடைய அக்கா அலெக்ஸிஸ் சலூனான் கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சி கல் நெஞ்சையும் கரைய வைக்கும் விதமாக உள்ளது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிந்த காவல்துறையினர் சிறுவன் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவரையும், அவர் பயணித்த காரை ஓட்டி வந்த பெண் ஒருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.