தமிழகத்தில் அதிகரித்து வரும் கருப்பு பூஞ்சை நோயை தடுக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கொரோனா தொற்று புதிய உச்சத்தை எட்டி நாட்டிலேயே அதிகப்படியான பாதிப்புகளை சந்தித்து வரும் மாநிலமாக தமிழக அரசு மாறி வருகிறது. நாளொன்றுக்கு 36 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வரும் சூழலில் அதிக அளவு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. படுக்கை வசதிகளும், மருந்துகளும், தடுப்பூசிகளும் இல்லாது மக்கள் தங்களை தற்காத்துக்கொள்ள திண்டாடி வரும் நிலையில், கொரோனா பெருந்தொற்று போல கருப்பு பூஞ்சை என்ற நோய் தொற்று மக்களிடையே பரவி வருகிறது.
வட மாநிலங்களில் கொரோனா தொற்றிலிருந்து மீண்டவர்கள் கருப்பு பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது சென்னை, மதுரை, விழுப்புரம், சேலம், தஞ்சை ஆகிய பகுதிகளில் வாழும் மக்களுக்கும் கருப்பு பூஞ்சை தொற்று தாக்குதல் ஏற்பட்டு வருவது பெரும் கவலையைத் தருகின்றது. எனவே கருப்பு பூஞ்சை தொற்றை தொடக்க நிலையிலேயே கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்துறை விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். அதுமட்டுமில்லாமல் கருப்பு பூஞ்சைத் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனைகளிலும் தனிப் பிரிவுகளை அமைக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் அதிகரித்து வரும் கறுப்புப்பூஞ்சை நோயைத் தடுக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்!https://t.co/jK8o4QiJlc pic.twitter.com/gkA5Erzf7k
— சீமான் (@SeemanOfficial) May 23, 2021