கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம் வழங்க கோரி அவருடைய கணவர் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள சேந்தங்குடி பகுதியில் முத்து-மீனா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். மீனா கூட்டுறவு மருந்தகத்தில் மருந்தாளுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் மீனா கடந்த மாதம் 12ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
இதனையடுத்து வீடு திரும்பிய மீனாவுக்கு ஆறு நாட்கள் கழித்து திடீரென இடது கண்ணில் பார்வை குறைவுடன் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மீனாவுக்கு பரிசோதனை செய்ததில் அவர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் ஐந்து நாட்களில் அவருடைய கண்ணை அகற்றிவிட வேண்டும். இல்லை என்றால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதனால் கடந்த 14ஆம் தேதி அவருடைய இடது கண் மற்றும் மேல் கன்னத்தின் சில பகுதிகள் அகற்றப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மீனாவின் கணவர் முத்து கூறியதாவது “எனது மனைவியின் மருத்துவ சிகிச்சைக்கு இதுவரை 9 லட்சம் செலவாகியுள்ளது. மேலும் 5 லட்சம் செலவாகும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் மேற்கொண்டு செலவு செய்வதற்கு எங்களிடம் வசதி இல்லை என்பதால் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அளித்துள்ளோம். இந்தக் கோரிக்கையை அவர்கள் பரிசீலித்து மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் எனது மனைவியை காப்பாற்ற நிவாரணம் வழங்க வேண்டும்” என அவர் கூறியுள்ளார்.