வட்டி பணம் கேட்டு அவமானப்படுத்திய மூதாட்டியை விவசாயி கடத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வெள்ளிமலை பட்டினம் பகுதியில் சுப்புலட்சுமி என்ற மூதாட்டி வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி அதே பகுதியில் வசிக்கும் விவசாயியான வீராச்சாமி என்பவருக்கு 50 ஆயிரம் ரூபாய் பணத்தை வட்டிக்கு கொடுத்துள்ளார். இந்நிலையில் சுப்புலட்சுமியை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட வீராச்சாமி வட்டி பணத்தை வாங்குவதற்கு வீட்டிற்கு வருமாறு கடந்த 8ஆம் தேதி கூறியுள்ளார். இதனையடுத்து அவரது வீட்டிற்கு சென்ற சுப்புலட்சுமிக்கு வீராச்சாமி உடல் வலி போக்குவதற்கான மாத்திரை என்று கூறி தூக்க மாத்திரையை கொடுத்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து மூதாட்டி மயங்கி பிறகு வீராச்சாமி அவரை காரில் பிஏபி வாய்க்கால் பகுதிக்கு கடத்தி சென்றுள்ளார். அதன் பிறகு வீராசாமி மூதாட்டியின் தலையில் இரும்பு கம்பியால் தாக்கியதோடு, அவரின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். மேலும் வீராச்சாமி மூதாட்டி அணிந்திருந்த 6 பவுன் தங்க நகையை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இந்நிலையில் மூதாட்டியை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மூதாட்டி பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்த காவல்துறையினருக்கு மூதாட்டியிடம் செல்போனில் கடைசியாக பேசிய வீராச்சாமி தான் அவரை கொலை செய்தது தெரியவந்துள்ளது. அதன்பின் வீராச்சாமியை கைது செய்து காவல்துறையினர் அவரிடம் நடத்திய விசாரணையில், கடந்த மாதம் வட்டி பணம் வாங்க வரும் போது சுப்பு லட்சுமி அவரை கேவலமாக பேசி அவமானப்படுத்தியதால், வீராச்சாமி அவரை கொலை செய்வதற்குத் திட்டமிட்டு தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அதன்பின் மூதாட்டிக்கு தூக்க மாத்திரை கொடுத்து கடத்தியதோடு, அவரை தாக்கி கொலை செய்ததை வீராச்சாமி காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.