புதுக்கோட்டை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வில் காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வாங்க கடைகளில்பொதுமக்கள் கூட்டம் அலைமோதி காணப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனாவின் 2 வது அலையின் தாக்கம் அதிகரித்து வருவதால் கடந்த 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஒரு சில தளர்வுகளுடன் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொற்று எண்ணிக்கையே அதிகரித்துக் கொண்டே இருப்பதால் முழு ஊரடங்கு இன்று முதல் ஒரு வாரத்திற்கு அமல்படுத்தப்பட்டு நேற்று முன்தினம் மாலை மேலும் நேற்று ஒரு நாள் முழுவதும் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது போக்குவரத்து தொடங்கி கடைகள் முழுவதும் திறக்கப்பட்ட நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீழ ரத வீதியில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் சாரை சாரையாக சென்றுள்ளன. இதனால் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து காய்கறிகள் மற்றும் மளிகை பொருட்கள் வாங்க கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும் மீன் மார்க்கெட் மற்றும் இறைச்சி கடைகளில் கூட்டம் அலைமோதி பண்டிகை தினங்களில் இருக்கும் கூட்டத்தைப் போல காணப்பட்டுள்ளது.