விருதுநகர் மாவட்டத்தில் வெளியே செல்வதாக கூறி சென்றவரின் உடல் கண்மாயில் மிதந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்துள்ள சம்பந்தபுரம் பகுதியில் முகமது ரபீக்(55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சென்னையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்த நிலையில் தற்போது ஊரடங்கு காரணமாக சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் வெளியே செல்வதாக கூறி சென்ற ரபீக் வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனைதொடர்ந்து அப்பகுதியில் இருக்கும் தாலுகா அலுவலகத்திற்கு அருகில் உள்ள ஒரு கண்மாயில் அவரது சைக்கிள் கிடந்துள்ளது.
இந்நிலையில் முகமது ரபீக் உடல் கண்மாயில் மிதந்தபடி இருந்துள்ளது. இச்சம்பவம் குறித்து உடனடியாக அக்கம்பக்கத்தினர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் ரபீக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் அவர் தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன.