போக்குவரத்து வசதி இல்லாமல் பரிசோதனைக்காக வரும் கர்ப்பிணிகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் சிறப்பு பஸ் அல்லது ஆம்புலன்ஸ் வசதி செய்து தர வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனாவின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதால் தமிழக அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இந்தநிலையில் முழு ஊரடங்கு காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு செல்ல இருக்கும் கர்ப்பிணி பெண்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
ஒவ்வொரு மாதமும் செவ்வாய் அல்லது வெள்ளிக் கிழமைகளில் கர்ப்பிணி பெண்கள் ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது அரசு மருத்துவமனைகளுக்கு சென்று தங்களது எடை, ரத்த அழுத்தம், குழந்தையின் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகளை செய்ய வேண்டிய அவசியத்தில் உள்ளனர். மேலும் 5 மற்றும் 7 மாதம் கடந்தவுடன் கர்ப்பிணி பெண்கள் தங்களது தாய் வீட்டிற்கு சென்று விடுகின்றனர்.
அங்கிருந்து பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கோ அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கோ செல்வதற்கு போக்குவரத்து வசதி இல்லாமல் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். எனவே அவர்களது சிரமங்களை கருத்தில் கொண்டு பரிசோதனைக்காக வரும் கர்ப்பிணி பெண்களுக்கு சிறப்பு பஸ் வசதி அல்லது சிறப்பு ஆம்புலன்ஸ் வசதிகளை செய்து கொடுக்க அரசு முன்வர வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.