சென்னையில் அடுத்த ஒரு வாரத்திற்குள் 100 படுக்கைகள் வசதிகொண்ட துணை மருத்துவமனைகள் அமைக்கப்படும் என இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் தற்போது பல மாவட்டங்களில் படுக்கை வசதி பற்றாக்குறை ஏற்பட்டு வருகின்றது. அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதி நிரம்பி விட்ட காரணத்தினால் மக்கள் பலர் வீட்டிலேயே தனிமைப் படுத்தப் படுகின்றனர். அதுமட்டுமில்லாமல் ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டு வருகின்றது.
இதனால் ஒவ்வொரு மாவட்டத்திலும் கூடுதல் படுக்கை வசதிகளை கொண்ட தற்காலிக மருத்துவமனையும் உருவாக்கப்பட்டு வருகின்றது. சென்னையில் சைதாப்பேட்டை மருத்துவமனை மற்றும் கிங்ஸ் இன்ஸ்டியூட்டில் புதிய படுக்கைகள் கொண்ட மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அடுத்து ஒரு வாரத்திற்குள் 100 படுக்கைகள் வசதிகொண்ட துணை மருத்துவமனைகள் அமைக்கப்படும் என இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்களை பார்வையிட்ட பின் இதை தெரிவித்தார்.