எடப்பாடி பழனிசாமி உட்பட அதிமுகவின் அனைத்து அமைச்சர்கள் மீதும் ஊழல் புகார் உள்ளதாகவும், தன்மீது கொடுக்கப்பட்டுள்ள ஊழல் புகாரை சட்டப்படி சந்திப்பேன் எனவும் முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் கூறியுள்ளார்.
தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்த நிலோபர் கபில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை தனது உதவியாளரான பிரகாசம் மூலம் பெற்றுக் கொண்டு வேலை வாங்கித் தராமல் மோசடி செய்ததாகவும், பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பணத்தை திருப்பிக் கேட்டு தன்னை தொந்தரவு செய்து வருவதாகவும், மே 3-ம் நாளன்று டிஜிபி அலுவலகத்தில் பிரகாசம் புகார் அளித்தார். இதற்கு முன்பாக தேர்தலில் போட்டியிட நிலோபர் கபிலுக்கு சீட் மறுக்கப்பட்டது.
இதனால் அப்போதைய அமைச்சர் கே.சி வீரமணி திட்டமிட்டே தனக்கு சீட் தரக்கூடாது என கட்சித் தலைமைக்கு நெருக்கடி கொடுத்ததாகவும், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கும் – கே.சி வீரமணிக்கும் ரகசிய உடன்பாடு உள்ளதாகவும் நிலோபர் கபில் குற்றம்சாட்டினார். இதையடுத்து அதிமுகவின் கொள்கை கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதாக கூறி முன்னாள் அமைச்சர் நிலோபர் கபிலை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கி ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டறிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் செய்தியாளர்களை சந்தித்த நிலோபர் கபில், பிரகாசம் வாங்கிய பணத்துக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், கடந்த ஏப்ரல் மாதமே பிரகாசம் மீது திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் தான் புகார் அளித்து இருப்பதாகவும் கூறினார். தன் தாய் மற்றும் சகோதரி கொரோனா தொற்றால் உயிரிழந்த அந்த வேதனையில் இருந்து மீள்வதற்குள் தன்னை கட்சியை விட்டு நீங்கி விட்டதாக கூறிய நிலோபர் கபில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி உட்பட அதிமுகவின் அனைத்து அமைச்சர்கள் மீதும் ஊழல் புகார் உள்ளது எனவும் தன் மீதான ஊழல் புகாரை சட்டப்படி சந்திப்பேன் எனவும் தெரிவித்தார்.