சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக 5 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மதுரை மாவட்டத்தில் உள்ள மேலமாரட் வீதியில் இருக்கும் தனியார் விடுதி கார் நிறுத்தும் இடத்தில் மதுபான பாட்டில்கள் விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி காவல் துறையினர் அங்கு விரைந்து சென்று சோதனை செய்துள்ளனர். இந்நிலையில் காவல்துறையினர் அப்பகுதியில் மது விற்பனை செய்து கொண்டிருந்த சோலையழகுபுரம் பகுதியில் வசிக்கும் மனோகரன் மற்றும் சுந்தரராஜன் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர். மேலும் காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 316 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து தெப்பக்குளம் பகுதியில் மது விற்பனை செய்த ராஜீவ், வில்லாபுரத்தில் மது விற்பனை செய்த மகேந்திரன், களத்துபொட்டல் பகுதியில் மது விற்பனை செய்த தினேஷ்குமார் ஆகிய மூவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடம் இருந்த 17 ஆயிரத்து 340 ரூபாய் பணம், 86 மது பாட்டில்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.