சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள பாறை மடையூர், அரசூர், ரெட்டியார் நகர், அமனலிங்காபுரம், கோடங்கிபட்டி போன்ற கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஆழியாற்றில் இருந்து தண்ணீரை எடுத்து கம்பாலபட்டி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீராக வழங்குகின்றனர். இந்நிலையில் இந்த திட்டத்திற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிதாக குழாய்கள் பதிக்கப்பட்டு இருக்கின்றது. ஆனால் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீர் சரியாக விநியோகிக்கப்படாததால் ஊராட்சி நிர்வாகத்தினர் குடிநீரை விலைக்கு வாங்கி பொதுமக்களுக்கு லாரி மூலம் விநியோகித்து வருகின்றனர்.
இது குறித்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கூறும்போது, மோட்டார் பழுது காரணமாக தற்போது 50 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வராததால் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் ஒரு குடும்பத்திற்கு 15 குடம் தண்ணீர் வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர். எனவே சீராக குடிநீர் விநியோகம் செய்ய அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.