ஊரடங்கின் விதிமுறைகளை மீறி ஏராளமான பயணிகளை ஏற்றி சென்ற தனியார் பேருந்து உரிமையாளருக்கு 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் கோத்தகிரி அருகிலிருக்கும் பாண்டியன் பூங்கா பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, அவ்வழியாக வந்த ஒரு தனியார் பேருந்தை நிறுத்தி உள்ளனர். அப்போது அந்தப் பேருந்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் ஏராளமான பயணிகளை ஏற்றி வந்ததை பார்த்து காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து பயணிகளிடம் நடத்திய விசாரணையில், திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக 3 வாகனங்களில் செல்ல இ-பதிவு செய்து விட்டு, அவர்கள் அனைவரும் ஒரே பேருந்தில் சென்றது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. இவ்வாறு சமூக இடைவெளியின்றி ஊரடங்கின் விதிமுறைகளை மீறி கூடுதல் பயணிகளை ஏற்றிச் சென்ற குற்றத்திற்காக பேருந்தின் உரிமையாளருக்கு காவல்துறையினர் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டனர்.