குடும்ப பிரச்சனையால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள இரவியதர்மபுரம் பகுதியில் கேரளாவைச் சேர்ந்த முகேஷ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு 21 வயதுடைய ஸ்ரீ குட்டி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்களுக்கு ஒன்றரை வயதுடைய குழந்தை ஒன்று இருக்கின்றது. கடந்த சில நாட்களாகவே ஸ்ரீ குட்டிக்கும் அவரது கணவருக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் ஸ்ரீ குட்டி மிகுந்த மன வேதனையுடன் இருந்துள்ளார்.
இந்நிலையில் தனது கணவர் வீட்டில் இல்லாத சமயத்தில் ஸ்ரீ குட்டி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து முகேஷ் வீட்டிற்கு சென்ற போது தனது மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டுள்ளார். அவரின் அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஸ்ரீ குட்டியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.