யாஸ் புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக கரையை கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலு பெற்றுள்ளதாகவும் யாஸ் என்ற பெயரிடப்பட்ட இந்த புயல் அடுத்த 12 மணி நேரத்தில் தீவிர புயலாகவும் அதனை தொடர்ந்து 24 மணி நேரத்தில் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என தெரிவிக்கபட்டுள்ளது. ஒடிசா மேற்கு வங்க கரையை நோக்கி நகரும் புயல் பாரதிப் சகா தீவுக்கு இடையே கடக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் சேலம், தர்மபுரி, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. புயல் எதிரொலியாக நாகை, கடலூர், எண்ணூர், புதுச்சேரி துறைமுகங்களில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.