கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கோரிய மனு மீது 10 நாட்களுக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இழப்பீடு கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நிறைய இடங்களில் கொரோனா இறப்பு சான்றிதழ்கள் முறையாக வழங்கப்படுவதில்லை என்றும், அவ்வாறு வழங்கப்பட்டால்தான் சம்மந்தப்பட்டவர்கள் உரிய இழப்பீடு பெற முடியும் என்றும் வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் தற்போது எந்த மாநிலத்திலாவது இழப்பீடு வழங்கப்படுகிறதா என கேள்வி எழுப்பினார். மேலும் கொரோனா இறப்பு சான்றிதழ்கள் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக வழங்கப்படுகிறதா கொரோனாவால் உயிரிழப்பவர்களுக்கு நிதி உதவி அளிக்க புதிய திட்டம் ஏதும் மத்திய அரசிடம் இருக்கிறதா ? என கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக 10 நாட்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.