இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜெய்தேவ் உனட்கட் ,இங்கிலாந்திற்கு எதிரான தொடரில் இடம்பெறாது கவலை அளிப்பதாக தெரிவித்துள்ளார் .
2010 ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், அறிமுகமான ஜெயதேவ் உனட்கட், இதுவரை 7 ஒருநாள் தொடர் மற்றும் பத்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடி உள்ளார். ஆனால் அவர் கடந்த 2018 ம் ஆண்டிற்குப் பிறகு, இந்திய அணியில் இடம்பெறவில்லை. 2019- 2020 ஆண்டிற்கான ரஞ்சி தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். இதனால் அவர் இந்திய அணியில் இடம் பெறுவார், என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர் மற்றும் இந்தியாவில் நடந்த இங்கிலாந்துக்கு எதிராக தொடரிலும் அவர் இடம்பெறவில்லை. அதோடு ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், அவர் அணியில் இடம்பெறவில்லை.
இதுகுறித்து அவர் கூறும்போது, ‘ ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் போது இந்திய அணி வலுவாக இருந்தது. இதனால் அணியில் இடம் கிடைக்காதது குறித்து, நான் கவலைப்படவில்லை. ஆனால் அந்த தொடரின் முன்னணி பவுலர்கள் காயத்தால் விலகிய போதும், எனக்கு அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது ஏமாற்றத்தை அளித்தது. அதோடு சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான போட்டியிலும், அடுத்து நடைபெற உள்ள இங்கிலாந்துக்கு எதிரான 5 டெஸ்ட் தொடரிலும் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும் என்று நினைத்தேன். ஆனால் மீண்டும் அணியில் இடம்பெறாதது எனக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. இருந்தாலும் என்னுடைய வாய்ப்புக்காக நம்பிக்கையை இழக்காமல் இருப்பேன் ‘ என்று கூறினார்.