தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், மே 23 ஆம் தேதி முழு ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எந்தவித தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் அவசர மருத்துவ காரணங்கள் மற்றும் இறப்பு காரணங்களுக்காக மட்டுமே மக்கள் வெளியில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி ஊழியர்கள், மின்னணுத் துறை ஊழியர்கள் மற்றும் ஊடகத் துறை ஊழியர்கள் வெளியில் செல்ல இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் இ-பதிவு பெற்று வெளியே செல்லும் வங்கி ஊழியர்கள், மின்துறை ஊழியர்கள் பணி நேரத்திற்கு மட்டுமே வெளியே செல்ல முடியும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர். மற்ற நேரங்களில் அவர்கள் வீணாக வெளியே சுற்ற அனுமதி இல்லை என கூறியுள்ளனர். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் ரோந்து வாகனங்களில் ஒலிபெருக்கி வைத்து பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரித்து வருகின்றனர்.