கோவை அருகே ஓட்டுனரை கத்தியால் குத்திக் கீழே தள்ளிவிட்டு மர்மநபர்கள் காரை கடத்திய பரபரப்பு சம்பவம் நடைபெற்றுள்ளது
வசந்தகுமார் என்பவர் கோவையில் ரெட் டாக்ஸி என்ற பெயரில் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இரண்டு நபர்கள் இவரை அணுகி மதுரைக்கு கார் பேசி அழைத்துச் சென்றுள்ளனர். சூலூர் அருகே வந்தபோது ஏடிஎம்மில் பணம் எடுக்க வேண்டும் என்று நிறுத்த சொல்லியுள்ளனர். அப்போது திடீரென ஓட்டுநர் வசந்தகுமாரை கத்தியால் குத்திக் கீழே தள்ளி விட்டு இருவரும் காரை கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
இதனை பார்த்த டீ கடைக்காரர் ஒருவர் அளித்த தகவலின் பேரில் காவல்துறையினர் உஷார்படுத்தப்பட்டனர். இதையடுத்து திருப்பூர் மாவட்டம் எல்லையில் உள்ள சோதனைச் சாவடியில் அந்த காரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். அதில் ஒருவர் தப்பி ஓட மற்றொருவர கைது செய்யப்பட அவரது பெயர் திருமுருகன் என்பதும் மற்றொருவர் பெயர் கொங்குசாமி என்பதும் இருவரும் அந்தமான் தீவை சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
தப்பி ஓடிய கொங்கு சாமியை காவல்துறையினர் தேடி வருகின்றனர். படுகாயமடைந்த ஓட்டுநர் வசந்தகுமார் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காரை கடத்தியதற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் ஒரு மணி நேரத்தில் காவல் துறையினர் கடத்தப்பட்ட காரை மீட்டது குறிப்பிடத்தக்கது.