கொரோனா பரவலைத் தடுக்க மத்திய அரசு தவறி விட்டதாக முன்னாள் பிரதமர் தேவகவுடா குற்றம் சாட்டியுள்ளார்.
பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கொரோனா தடுப்பு பணிகளுக்கு சிறிய மாநிலங்களுக்கு அதிக நிதியும், கர்நாடகம் போன்ற பெரிய மாநிலங்களுக்கு குறைந்த நிதியும் மத்திய அரசு ஒதுக்கி உள்ளதாகவும் இது குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளதாகவும் குறிப்பிட்டார். கொரோனா பரவலுக்கு 5 மாநில சட்டசபை தேர்தலும் ஒரு காரணம் என சுட்டிக்காட்டிய தேவகவுடா மத்திய அரசு அந்த தேர்தல்களில் தான் அதிக கவனம் செலுத்தியதாகவும்,
கொரோனா தடுப்பு பணியில் உரிய கவனம் செலுத்தி இருந்தால் இவ்வளவு பாதிப்பு ஏற்பட்டு இருக்காது எனவும் குற்றம் சாட்டினார். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்து கொரோனா பரவலைத் தடுப்பதில் மத்திய அரசு அலட்சியமாக செயல்பட்டதாகவும் வைரஸ் பரவலை தடுக்க தவறி விட்டதாகவும் சாடினார்.