திருப்பத்தூரில் ஊரடங்கின்போது வெளியில் சுற்றித் திரிபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஒரு வாரம் முழு ஊரடங்கை தமிழக முதல்வர் திரு. முக. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனால் திருப்பத்தூர் மாவட்டத்தில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு சாலைகளில் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டுள்ளது. இதனையடுத்து ஊரடங்கு விதிமுறைகளை கண்காணிக்க காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது வெளியில் சுற்றித் திரிபர்களை நிறுத்தி காவல்துறையினர் விசாரித்துள்ளனர்.
இதனையடுத்து அத்தியாவசிய தேவைக்காக வெளியில் செல்வர்களை மட்டும் காவல்துறையினர் அனுமதித்துள்ளனர். இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் கூறியபோது திருப்பத்தூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு விதிமுறைகளை மீறி வெளியில் சுற்றித் திரிபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு காலத்தில் பொது மக்களுக்கு ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் மாவட்ட காவல்துறை சார்பில் உதவி மையம் எண் 9442992526 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்று போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தெரிவித்துள்ளார்.