ப.சிதம்பரம் சிபிஐ அலுவலகத்துக்கு விசாரணைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நேற்று ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனுவை இரத்து செய்ததில் இருந்து உச்சநீதிமன்றத்தில் எப்படியாவது மனு தாக்கல் செய்து உடனடி கைதுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் தொடர்ந்து முயற்சி செய்தனர்.ஒரு பக்கம் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சிதம்பரம் எங்கே என்று அவருடைய இல்லத்திற்கு மீண்டும் , மீண்டும் வந்து விசாரித்து கொண்டிருந்தனர். சிதம்பரம் எங்கே இருக்கின்றார் என்று இதுவரைக்கும் தெரியாமல் இருக்கும் நிலையில் எப்படியாவது ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் முனைப்பு காட்டி வந்தனர்.
அதே சமயம் இன்று உச்சநீதிமன்றமும் ப.சிதம்பரம் மனுவை விசாரிக்காமல் வெள்ளிக்கிழமை தான் விசாரிப்போம் என்று கைவிரித்து விட்டது. அதே வேளையில் சிதம்பரத்தை கைது செய்வதற்கு எந்தவிதமான தடையும் இல்லை என்பதால் இன்று இரவு , நாளை காலை , நாளை இரவு என்று அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம். இந்நிலையில் சிபிஐ அவருக்கு சம்மன் அனுப்பி இருக்கிறது. இந்த சம்மனுக்கு அவர் ஆஜராகும் பட்சத்தில் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கலாம்.எனவே அவராகவே சிபிஐ அலுவலகத்திற்கு விசாரணைக்கு வரக்கூடும் என்று சிபிஐ அதிகாரிகள் கருதுகிறார்கள்.