தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.
ராமநாதபுரத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதிலும் தற்போது 3,252 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து அவர்களுக்கு தினமும் சத்தான உணவுகள் வழங்க வேண்டும் என்றும், வீடுகளில் தனிமை படுத்தப்பட்டவர்களுக்கு அத்தியாவசிய பொருள்கள் உடனடியாக அவர்களுக்கு சென்று சேர வேண்டும் எனவும் நகராட்சி அதிகாரிகளிடம் கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து மருத்துவமனைகளில் தேவைக்கேற்ப ஆக்சிஜன் இருப்பு உள்ளதா என உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று கூறிய பொன்ராஜ் ஆலிவர் வீடு வீடாக சென்று காய்ச்சல் பரிசோதனை செய்யும் பணிகளை அதிகப்படுத்த வேண்டும் எனவும் நகராட்சி பணியாளர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் தனியார் மருத்துவமனைகளில் அரசு நிர்ணயித்துள்ள கட்டண முறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார்.