‘கைதி 2’ படம் உருவாவது குறித்து தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபு விளக்கமளித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் கார்த்தி நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் கைதி. லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் அர்ஜுன் தாஸ், நரேன், தீனா, ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியான இந்த படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தயாரித்திருந்தார் . இதையடுத்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா? என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ‘கைதி-2’ படம் நிச்சயம் உருவாகும் என நடிகர் கார்த்தி தெரிவித்திருந்தார்.
ஆனால் இதன் பின் கைதி 2 படம் குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கமலின் விக்ரம் படத்தை இயக்க உள்ளார். அதேபோல் நடிகர் கார்த்தி பொன்னியின் செல்வன், சர்தார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ‘லோகேஷ் கனகராஜ், கார்த்தி இருவரும் ஒப்புக் கொண்ட படங்களை முடித்தவுடன் கண்டிப்பாக கைதி 2 திரைப்படம் உருவாகும்’ என கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.