கன்னியாகுமரியில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழையால் வீடுகளில் வெள்ளம் புகுந்து மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று சூறைக்காற்றுடன் கூடிய கனமழையால் பள்ளமான பகுதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனையடுத்து நாகர்கோவிலில் பெய்த கனமழையால் மீனாட்சிபுரம் பகுதியில் இருக்கும் அரசு உயர்நிலைப் பள்ளியின் சுவர் இடிந்து சாலையில் விழுந்தது. அதனை மாநகராட்சி ஊழியர்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றியுள்ளனர். மேலும் சூறைக்காற்றுடன் கூடிய கனமழையால் மாநகரின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் சாய்ந்ததால் மின்தடை துண்டிக்கப்பட்டு வீடுகளில் மின் இணைப்பு இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வந்திருக்கின்றனர்.
இதனால் தீயணைப்பு துறை வீரர்கள் பாதிக்கப்பட்ட இடத்திற்குச் சென்று சாய்ந்த மரங்களை எந்திரம் மூலம் வெட்டி அகற்றியுள்ளனர். அதேபோன்று ராஜாக்கமங்கலம் யூனியனுக்கு உட்பட்ட சுண்டபற்றிவிளையில் புதிதாக கட்டப்பட்டிருந்த நிழற்குடை சூறைக்காற்றுடன் பெய்த கன மழையால் இடிந்து விழுந்தது. இவ்வாறு கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சூறை காற்றுடன் கூடிய கனமழையால் வீடுகளில் வெள்ளம் புகுந்து மின்தடை ஏற்பட்டதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். ஆனால் இனிவரும் காலங்களில் மழை நீர் தேங்காதவாறு கழிவுநீர் ஓடைகளை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.