தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், மே 23 ஆம் தேதி முழு ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எந்தவித தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் அவசர மருத்துவ காரணங்கள் மற்றும் இறப்பு காரணங்களுக்காக மட்டுமே மக்கள் வெளியில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகம் முழுவதும் மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் வருகின்ற 30ஆம் தேதி வரை அலுவலகத்திற்கு வருவதில் இருந்து முழுமையாக விலக்களித்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே கடந்த 23ஆம் தேதி வரை அலுவலகம் வருவதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மே 30ஆம் தேதி வரை நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.