தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் கொரோனா பாதிப்பு குறையாத காரணத்தால், மே 23 ஆம் தேதி முழு ஊரடங்கு முடிவடைய இருந்த நிலையில், மே 31-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எந்தவித தளர்வும் இல்லாமல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் அவசர மருத்துவ காரணங்கள் மற்றும் இறப்பு காரணங்களுக்காக மட்டுமே மக்கள் வெளியில் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விவசாயிகள் பலரும் வெங்காயத்தை விற்க கோரிக்கை விடுத்ததால், அவர்களின் கோரிக்கையை ஏற்ற திருச்சி வெங்காய மண்டியில் நாளை இரவு மட்டும் மொத்த விற்பனை நடக்கும் என்று மொத்த விற்பனை சங்கத்தின் செயலாளர் தங்கராஜ் தகவல் தெரிவித்துள்ளார். பெரம்பலூர், தாராபுரம், உடுமலைப்பேட்டை பகுதிகளில் சின்ன வெங்காயத்தின் விளைச்சல் அதிகரித்துள்ளது. வெங்காயம் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறியதை ஏற்று சின்ன வெங்காயத்தை விற்பனைக்கு கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.