அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மிரட்டல் விடுக்கும் விதமாக பா சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார் என திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி கூறியுள்ளார்.
ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தற்போது வரை விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கு பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திமுக அமைப்பு செயலாளர் R.S.பாரதி இது குறித்து கூறுகையில்,
ப.சிதம்பரம் அவர்களை கைது செய்த விதம் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட அத்தனை பேரும் வருத்தப்படக் கூடிய ஒரு நிலையை ஏற்பட்டுத்தியிருக்கிறது. சுவர் ஏறி குதித்து கைது செய்யும் அளவிற்கு ப.சிதம்பரம் வழக்கில் மும்முரம் காட்டிய சிபிஐ விஜய் மல்லையா தப்பி சென்ற போது மௌனம் காத்தது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். ப.சிதம்பரம் கைது செய்யபட்டது அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களையும் மிரட்டும் வகையில் அமைந்திருக்கிறது என்று தெரிவித்தார்.