உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரு கிராமத்தில் 20 பேருக்கு முதல் டோஸாக கோவிஷீல்ட் போடப்பட்ட நிலையில் இரண்டாவது டோஸாக கோவாக்சின் போடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து 270 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் அங்கு வசிக்கும் கிராமவாசிகள் ஏப்ரல் முதல் வாரத்தில் டோஸாக கோவிஷீல்டை செலுத்தி கொண்டனர். இதையடுத்து மே 14-ஆம் தேதி இரண்டாவது டோஸ் போடப்பட்டது. ஆனால் இரண்டாவது டோஸாக கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தலைமை மருத்துவ அதிகாரி சந்தீப் கூறும்போது: இது முழுக்க முழுக்க ஊழியர்களின் அலட்சியத்தால் நிகழ்ந்துள்ளது எனவும், இதற்கு அரசு தரப்பில் இருந்து எந்த உத்தரவும் வழங்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களை எங்களது குழு கண்காணித்துக் கொண்டு வருகின்றது. அவர்கள் மிகவும் நலமாக உள்ளனர் என்று தெரிவித்தார். இதுகுறித்து தடுப்பூசி எடுத்துக்கொண்ட கிராமவாசிகள் கூறும்போது: “ஏப்ரல் 1ஆம் தேதி முதல் டோஸாக கோவிஷீல்டை எடுத்துக்கொண்டோம். பிறகு மே 14ஆம் தேதி இரண்டாவது டோஸாக கோவாக்சின் எடுத்துக்கொண்டோம். யாரும் அதனை சரியாக கவனிக்கவில்லை, எங்களுக்கு சிறிது பயமாகவே இருக்கிறது. இது வரை யாரும் எங்களைத் தொடர்புகொள்ளவில்லை” என்றும் கூறியுள்ளனர்.