ப.சிதம்பரத்தை கைது செய்யப்பட்டதை எதிர்த்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி போராட்டம் அறிவித்துள்ளது.
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் 24 மணி நேரத்திற்கு பின்பு நேற்று செய்தியாளர்களை சந்திக்க காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தார்.இதையறிந்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு விரைந்தனர்.
இதை தொடர்ந்து தன்னுடைய பத்திரிக்கையாளர் சந்திப்பை விரைவாக முடித்துக் கொண்ட ப.சிதம்பரம் டெல்லி வீட்டிற்கு சென்றார்.இதையடுத்து இரவோடு இரவாக சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையினர் ப.சிதம்பரம் வீட்டின் சுவர் ஏறி குதித்து கைது செய்து இரவே சிபிஐ அலுவலகம் அழைத்துச் சென்றனர்.
ப.சிதம்பரத்தின் கைது காங்கிரஸ் தொண்டர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ப.சிதம்பரம் கைதை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் அறிவித்துள்ளது.இதனிடையே கைது செய்யப்பட்ட சிதம்பரத்தை இன்று மாலை 4 மணிக்கு சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.