அண்ணாத்த படப்பிடிப்பின் கடைசி நாளில் படக்குழுவினரிடம் நடிகர் ரஜினி மனம் திறந்து பேசியுள்ளார்.
தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. இயக்குனர் சிவா இயக்கும் இந்த படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ, சூரி, சதீஷ், ஜார்ஜ் மரியன், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு டி இமான் இசையமைக்கிறார். மேலும் இந்த படம் வருகிற தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு பிறகு நடிகர் ரஜினி தொடர்ந்து படங்களில் நடிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது. இந்நிலையில் நடிகர் ரஜினி ஹைதராபாத்தில் அண்ணாத்த படப்பிடிப்பை நிறைவு செய்த கடைசி நாளில் படக்குழுவினரிடம் மனம் திறந்து பேசியுள்ளார்.
அப்போது அவர் ‘தொடர்ந்து படங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறது . ஆனால் அதற்கு உடல் ஒத்துழைக்குமா என தெரியவில்லை. கொரோனா முடிவுக்கு வந்த பிறகுதான் அடுத்த படம் பற்றி முடிவு செய்வேன். என் கரியரில் அண்ணாத்த படம் மிக முக்கியமானதாக இருக்கும். எப்படியாவது இந்த படத்தை முடித்துக் கொடுக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஒரே கவலையாக இருந்தது. நல்லபடியாக இப்போது அண்ணாத்த படம் முடிந்திருக்கிறது. எல்லோரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள். கொரோனா குறைந்த பிறகு மீதி இருக்கும் பணிகளை செய்யலாம்’ எனக் கூறியுள்ளார்.