அமீரகத்தின் விண்வெளி வீரர்களுக்கு, சர்வதேச விண்வெளி மையத்தை இயக்குவதற்கான சிறப்பு பயிற்சிகள் நாசாவின் டி-38 ஜெட் விமானத்தில் அளிக்கப்பட்டு வருகிறது.
அமீரகத்தினுடைய பயிற்சி பெற்ற விண்வெளி வீரர்கள் ஹசா அல் மன்சூரியும், சுல்தான் அல் நியாதியும் ஆவர். இதில் கடந்த 2019 ஆம் வருடத்தில் ரஷ்யாவின் சோயுஸ் விண்கலத்தின் மூலமாக சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஹசா அல் மன்சூரி சென்று வந்திருக்கிறார். எனினும் சிறந்த பயிற்சியை பெறுவதற்காக தற்போது அமெரிக்காவிற்கு சென்றிருக்கிறார்.
இதில் நாசாவின் கீழ் இயங்கி வரும் ஜான்சன் விண்வெளி மையத்தில் கடந்த 7 மாதங்களாக அவர்களுக்கு சிறந்த பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதாவது விண்வெளி பயணத்தில் தாம் அமர்ந்து பயணம் செய்யும் இருக்கைகளை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்கப்படுகிறது.
இதேபோன்று அமெரிக்காவின் டி-38 என்ற அதிநவீன ஜெட் விமானத்திற்கான பயிற்சிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தினுடைய பாகங்கள், அவசர காலத்தில் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள், வேகத்தை கட்டுப்படுத்தி செல்வது, ஐந்து கிலோ மீட்டர் உயரத்தில் கட்டுப்பாட்டு தொழில்நுட்ப கருவிகளை வைத்து விமானத்தை உரிய திசையில் செலுத்துவது, மீட்பு இருக்கைகளை எவ்வாறு கையாள வேண்டும் போன்றவை கற்றுக்கொடுக்கப்படுகிறது.
அதாவது அதிநவீன ஜெட் விமானத்தை போன்று தான் சர்வதேச விண்வெளி மையத்தின் கட்டுப்பாட்டு தொழில்நுட்பங்களும் இருக்கிறதாம். எனவே இவ்வாறான பயிற்சிகள் கற்றுக் கொடுக்கப்படுகிறது. இதுமட்டுமன்றி ரோபோக்களை கையாள்வது, கணினியின் செயல்பாடுகள், புதிதாக கருவிகள் பொருத்தப்படுதல் போன்ற சிறப்பான பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகிறது.
இப்பயிற்சிகள் நிறைவு பெற்றபின் விண்வெளி வீரர்கள் இருவரும் வருங்காலத்தில் அதிக நாட்களுக்கு சர்வதேச விண்வெளி நிலையத்திலேயே தங்கி பல பணிகளை மேற்கொள்ளும் அளவிற்கு திறன்களை பெற்று விடுவார்கள் என்று துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி ஆய்வு மையத்தின் விண்வெளி வீரர்களின் அலுவலக இயக்குனரான சயீத் கரமோஸ்த்தஜி தெரிவித்துள்ளார்.