தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு எட்டு மாதங்கள் கழித்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப் பட்டது. ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை அளிக்கப் பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால், மாணவர்களும் இளைஞர்களும் வீட்டில் முடங்கி இருக்க முடியாமல் அருகில் உள்ள பள்ளி மைதானங்களில் விளையாடச் சென்று விடுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் இளைஞர்கள் கூடி காலை மாலை நடைப் பயிற்சியும் மாலையில் பல்வேறு விளையாட்டுகளில் ஈடுபடுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. அதனால் பலர் ஒரே இடத்தில் கூடுவதால் அதிக பரவும் சூழல் ஏற்பட்டு விடுகிறது. மேலும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறுவதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் சென்றுள்ளது.
இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருக்க வேண்டும். வெளியிடங்களில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் கூடுவதற்கு எந்த அனுமதியும் கிடையாது. அதனால் பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கூடி விளையாட அனுமதிக்க வேண்டாம் என்று தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருப்பதால் அத்தியாவசிய அலுவலகங்கள் தவிர மற்ற அரசு துறை அலுவலகங்கள் செயல்பட அனுமதி இல்லை.
இதனை கருத்தில் கொண்டு மறு அறிவிப்பு வரும் வரை பள்ளி வளாகங்களில் யாரும் வராத வகையில் பூட்டி வைக்க வேண்டும். அதனை மீறி யாராவது செயல்பட்டால் போலீசில் புகார் அளிக்க வேண்டும் என்று தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் விளையாட செல்லாமல் வீட்டில் பாதுகாப்பாக இருப்பது மிகவும் நல்லது.