தென்காசியில் முதியவர் தனக்குக் கொரோனா தொற்று இருக்குமோ என்ற பயத்தில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
தென்காசி மாவட்டத்திலுள்ள வெள்ளாளன்குளம் பகுதியில் 70 வயதுடைய ஆறுமுகம் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். கடந்த ஒரு வாரமாக ஆறுமுகத்திற்கு காய்ச்சல் இருந்துள்ளது. இதனால் இவர் அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அப்போது சுகாதார ஊழியர்கள் ஆறுமுகத்திற்கு கொரோனா தொற்றிற்கான பரிசோதனை செய்துள்ளனர். இதனையடுத்து கொரோனா பரிசோதனை செய்த பிறகு ஆறுமுகம் தனக்கு கொரோனா தொற்று இருக்குமோ என்ற அச்சத்தில் மிகுந்த மன வேதனையுடன் இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ஆறுமுகம் விஷம் குடித்துவிட்டு மயங்கிக் கீழே விழுந்து கிடந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள்மயங்கிய நிலையில் இருந்த ஆறுமுகத்தை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து ஆறுமுகம் ஏற்கனவே பரிசோதனை செய்த கொரோனா தொற்றிற்கான ரிப்போர்ட் வந்துள்ளது. இதில் ஆறுமுகத்திற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ஆறுமுகத்தை உடனடியாக கொரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டுக்கு மாற்றியுள்ளனர். ஆனால் அங்கு அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலன் அளிக்காமல் ஆறுமுகம் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.