காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதி இருவரும் இணைந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள திருமலபுரம் பகுதியில் மகேந்திரன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இவருக்கு தாரணி என்ற மனைவி இருந்துள்ளார். இவர்கள் 2 பேரும் ராஜபாளையத்தில் உள்ள நூற்பாலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளனர். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மகேந்திரன் மற்றும் தாரணி ஆகிய இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த மகேந்திரனின் பெற்றோர் கணவன், மனைவி இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து அலறி சத்தம் போட்டுள்ளனர். அந்த அலறல் சத்தத்தை கேட்டு அருகில் இருந்தவர்கள் விரைந்து சென்று பார்த்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் தாரணி மற்றும் மகேந்திரனின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கடந்த 2 ஆண்டுக்கு முன்பே மகேந்திரன் மற்றும் தாரணி இருவரும் வேலை செய்யும் இடத்தில் பழகிக் காதலித்து வந்துள்ளனர். இதனால் மகேந்திரன் மற்றும் தாரணி ஆகிய இருவரும் தங்களது காதலை அவரது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இருவரின் காதலை ஏற்றுக் கொண்ட பெற்றோர்கள் மகேந்திரன் மற்றும் தாரணிக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இந்நிலையில் மகேந்திரனுக்கு அடிக்கடி தலைவலி ஏற்பட்டதால் பல்வேறு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனாலும் மகேந்திரனுக்கு தலைவலி குணமடையாத காரணத்தால் மிகுந்த மன மனவேதனையுடன் இருந்துள்ளார். இதனால் வலி தாங்க முடியாத மகேந்திரன் தினந்தோறும் தனது மனைவியிடம் தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தாரணி நீங்கள் இல்லாமல் என்னால் வாழ முடியாது என்று கூறி இருவரும் சேர்ந்து விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இவ்வாறு காதலித்து திருமணம் செய்து கொண்ட தம்பதிகள் இருவரும் ஒன்றாக விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.