சேலம் மாவட்டத்தில் சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 1 1/2 லட்சம் மதிப்புள்ள மதுபாக்கெட்டுகளை மது விலக்கு காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள இரும்பாலை மதுவிலக்கு காவல் துறையினருக்கு தீவட்டிப்பட்டி பகுதிகளுக்கு சரக்கு வாகனத்தில் மதுபாட்டில்கள் கடத்தி வரப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் காவல் துறையினர் ஜோடுகுளி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது கர்நாடகாவிலிருந்து வந்த சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது அதில் பழச்சாறு பெட்டிகளில் இருந்துள்ளது. ஆனால் சந்தேகத்தின் பேரில் அந்தப் பெட்டிகளை காவல் துறையினர் பிரித்து பார்த்த போது பெட்டியினுள்ளே மதுபாக்கெட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டு பிடித்துள்ளனர். அதில் மொத்தம் 25 பெட்டிகளில் 48 மதுபாக்கெட்டுகள் வீதம் மொத்தம் 1,200 பாக்கெட்டுகள் இருந்துள்ளது.
இதனையடுத்து சரக்கு வாகனத்தில் வந்தவர்களை விசாரணை செய்த போது அவர்கள் ஜோடுகுளி பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் மற்றும் அவருடைய தம்பி ரமேஷ் என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவர்களை கைது செய்த காவல் துறையினர் அவர்களிடமிருந்து 1 1/2 லட்சம் மதிப்புள்ள மதுபாக்கெட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.