கொரோனா பரிசோதனை முடிவுகளை துல்லியமாகவும், துரிதமாகவும் கணக்கிட உருவாக்கப்பட்ட பிரீத்லைசர் கருவி சிங்கப்பூரில் பரிசோதிக்கப்பட்டு வெற்றியடைந்துள்ளது.
சிங்கப்பூரின் தேசிய பல்கலைக்கழகம் சார்பாக பிரீத்லைசர் என்ற கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மனிதர்கள் விடும் மூச்சுக் காற்றை பயன்படுத்தி கொரோனா தொற்று கண்டறியப்படுகிறது. துபாய் சுகாதார ஆணையம், இந்த கருவியை பரிசோதிக்க முயற்சி மேற்கொண்டுள்ளது.
துபாய் சுகாதார மையத்தின் சார்பாக முகமது பின் ராஷித் மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்போடு, பல நோயாளிகளுக்கும், பொதுமக்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டிருக்கிறது. சுகாதார ஆணையத்தின் கீழ் இயங்கும் நாத் அல் ஹமர் ஆரம்ப சுகாதார மையத்தில் கடந்த மார்ச் மாதத்திலிருந்து சுமார் 2500 நபர்களுக்கு பிரீத்லைசர் கருவி மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் 95% துல்லியமாக முடிவுகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த கருவியை வாயில் வைத்து உதவுவதற்கு ஏற்ப குழாய் உள்ளது. மேலும் இதன் வெளிப்பகுதியில் ஒரு தடவை மட்டும் வாயில் வைத்து உபயோகிக்கும் வகையில் ரப்பர் இருக்கிறது. குழாயின் வழியே நாம் ஊதினால் மூச்சு காற்றில் படிந்திருக்கும் கரிம பொருட்களின் அளவு கணக்கிடப்படும்.
அதிலிருந்து நோய் எதிர்ப்பு திறன் கணக்கிடப்படுகிறது. மேலும் பிசிஆர் சோதனைகளில் சுமார் 48 மணி நேரத்தில் முடிவுகள் வெளியாகும். ஆனால் ப்ரீத்லைசர் கருவி மூலம் ஒரு நிமிடத்திலேயே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. தற்போது சிங்கப்பூர் சுகாதாரத்துறை இக்கருவியை உபயோகப்படுத்த அனுமதி அளித்திருக்கிறது.