முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் விவகாரத்தில் சட்டம் தன் கடமையைச் செய்ய வேண்டும் என அமைச்சர் க.பாண்டியராஜன் கூறியுள்ளார்.
ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தற்போது வரை விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கு பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அமைச்சர் க.பாண்டியராஜன் இதுகுறித்து கூறுகையில்,
ப.சிதம்பரம் அவர்கள் குற்றவாளியாக இருப்பினும், அவர் நிதி அமைச்சராக இருந்தவர் என்பதன் அடிப்படையில் அவருக்கு அளிக்க வேண்டிய மரியாதையை அவருக்கு தர வேண்டும் என்பதுதான் என்னுடைய நிலைப்பாடு என்று தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், காழ்ப்புணர்ச்சியுடன் தனிமனிதரிடம் நடந்துகொள்வதை அம்மாவின் அரசாங்கம் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ளாது. மேலும் தவறு நிரூபிக்கப்படும் பட்சத்தில் சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.