காஷ்மீர் விவகாரத்தை மூடி மறைக்கவே ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்துள்ளார்.
ஐஎன்எக்ஸ் வழக்கில் ஒரு நாள் முழுவதும் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மூத்த வழக்கறிஞருமான ப.சிதம்பரத்தை நேற்று இரவு அவரது இல்லத்தில் சுவர் ஏறி குதித்து சிபிஐ அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். இரவோடு இரவாக சிபிஐ தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு தற்போது வரை விசாரிக்கப்பட்டு வருகிறார். இதற்கு பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் இது குறித்து கூறுகையில்,
ஒரு சர்வாதிகார மனோபாவத்தோடு, ஒரு வன்மத்தோடு நடத்தப்படுகிற நடவடிக்கை என்றும், இந்த நடவடிக்கையை நிச்சயமாக இந்திய நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் தெரிவித்தார். காஷ்மீர் பிரச்சினை ஒரு பூதாகரமான பிரச்சினையாக மாறி வரும் சூழ்நிலையில் அதிலிருந்து மக்களுடைய கவனத்தை திசை திருப்பவே சிதம்பரத்தை கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதே தவிர இதில் துளி அளவு கூட நேர்மை இல்லை முற்றிலும் ஏமாற்று வேலை என்று தெரிவித்தார்.