ராக்கெட் லாஞ்சர் உட்பட வெடிக்காத 4 குண்டுகளை செயலிழக்க செய்து அதிகாரிகள் புதைத்து விட்டனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள வீர மலை அடிவாரத்தில் வழக்கமாக ராணுவ வீரர்களின் துப்பாக்கி சுடும் பயிற்சி நடைபெறும் போது அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும். இந்த பயிற்சி முடிந்த பிறகு ராணுவ வீரர்கள் வெடிக்காத குண்டுகளை செயலிழக்க செய்து விட்டு அங்கிருந்து புறப்படுவர். இந்நிலையில் கோவையில் இருந்து வந்த ராணுவ வீரர்கள் கடந்த ஜனவரி மாதம் அப்பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனை அடுத்து ராணுவ வீரர்கள் வெடிக்காத 4 ராக்கெட் லாஞ்சர் குண்டுகளை தேடிய போது, அது கிடைக்காததால் உடனடியாக வையம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
அந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில் கரூர் மாவட்டத்தில் உள்ள தோகைமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் ஒரு ராக்கெட் லாஞ்சர் உட்பட 3 குண்டுகளும், வையம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வெடிக்காத நிலையில் 1 குண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட இராணுவ படைப்பிரிவின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பிறகு அதிகாரிகள் வெடிக்காமல் இருந்த 4 குண்டுகளையும் செயலிழக்க செய்து வீரமலை அடிவார பகுதியில் ஆழமாக குழி தோண்டி புதைத்து விட்டனர்.